velanai animation

Saturday, May 21, 2011

சேர் .வைத்தியலிங்கம் துரைசுவாமி

சேர் .வைத்தியலிங்கம் துரைசுவாமி 

முன்னாள் சட்டசபை உறுப்பினர் (1920 - 1930 ), 
முன்னாள் சபாநாயகர் (1936 - 1947 )

        சேர் வை துரைசுவாமி அவர்கள் 1874 ஆம் ஆண்டு ஜீன் மாதம் எட்டாம் திகதி வேலணையில் பிறந்தார். இலங்கை வரலாற்றில் அழியாத இடம் பெற்றுள்ள தலைவர்களில் ஒருவர் . நாட்டு மக்கள் அனைவராலும் விரும்பப்பட்ட நற்றமிழர் . அவர் ஒரு தேசாபிமானி ,சைவாபிமானி ,சிறந்த வழக்கறிஞர் , சமுகத்தொண்டர் ,கல்விக்கூடங்கள் பலவற்றின் தாபகர் ,சைவ வித்தியா விருத்திச் சங்கம் ,சைவ பரிபாலனசபை ,யாழ்ப்பாணச் சங்கம் ஆதியாம் நிறுவனங்களின் தலைவர்
         இலங்கை அரசாங்க சபையின் சபாநாயகராக 1936 முதல் 1947 வரை விளங்கிய ஒரே தமிழ்மகன் . ஆறாம் ஜோர்ச் மன்னரின் முடிசூட்டு விழாவுக்கு மன்னரால் அழைக்கப்பெற்று "சேர்" பட்டம் வழங்கி கௌரவிக்கப் பட்டவர் .1936 முதல் 1947 வரை இலங்கையின் முதல் பிரசையாக விளங்கிய பெருமைக்குரியவர் . இலங்கை அரசியல் அரங்கில் 1920 ஆம் ஆண்டு முதல் 1947 ஆம் ஆண்டு வரை முதனிலை வகித்த பெருந்தகை . நாட்டின் விடுதலைக்கு அஞ்சாது குரல் கொடுத்த அரசியல்வாதி . சிறந்த ஆன்மீகவாதி . யோகர் சுவாமிகளின் பேரன்புக்குரியவர் .இத்தகு சிறப்புக்கள் அனைத்தும் ஒருங்கமைந்த பெருமகன்தான்  வேலனைத் தாயின் தவப்புதல்வன் சேர் வைத்தியலிங்கம் துரைசுவாமி

திரு .நா .இளையதம்பி

திரு .நா .இளையதம்பி 

பழம்பெரும் அதிபர் 

        வேலணையில் ஆசிரியர்த் தொழிலில் ஈடுபட்டவர்களில் இவர் முன்னோடியாகத் திகழ்கிறார் . 20  ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் தொடங்கிய இவரது ஆசிரியப் பணி இந்நூற்றாண்டின் நடுப்பகுதி வரை நீடித்தது . இவரது ஆசிரியப் பணியின் மிகக்கூடிய பகுதி வேலணையில் அமெரிக்கன் மிஷன் பாடசாலையிலே இடம்பெற்றது. இவர் பெரும் எண்ணிக்கையான மாணவர்களுக்கு கல்வி கற்பித்ததால் இவரை வேலணைக் கிராம மக்கள் "பெரிய உபாத்தியாயர்" என்று அழைத்ததுடன் அவர்களின் மரியாதைக்குரியவராகவும் இருந்தார்
        இவர் 1888 ஆம் ஆண்டு வேலணையில் பிறந்து தமது இளமைக் கல்வியை வேலணை அமெரிக்கன் மிஷன் பாடசாலையில் கற்று பின்னர் கோப்பாய் ஆசிரியர் பயிட்சிக் கலாசாலையில் சேர்ந்து பயிற்றப்பட்ட ஆசிரியராக வெளியேறினார். இவரது ஆசிரியர்ப் பணி சிறந்ததாக இருந்ததால் அமெரிக்கன் மிஷனரியினர் இவரை வேலணைப் பாடசாலையின் அதிபராக நியமித்தனர்இவர் ஆசிரியர் பணியில் இருந்து ஓய்வு பெற்ற பின்பும் தொடர்ந்து கிராமத்தில் வாழ்ந்து கிராமிய மக்களுக்கு பல வழிகளிலும் உறுதுணையாக இருந்தும் தலைமைத்துவம் கோடுத்தும் வாழ்ந்தார் .    

திரு .அருணாசலம் வைரமுத்து

திரு .அருணாசலம் வைரமுத்து 

பழம்பெரும் அதிபர்

       செந்நெல் கழனிகளும் தொட்ட வெளிகளும் சூழ்ந்த சரவணை கிழக்கில் பள்ளம் புலமெனும் கிராமத்தில் அருணாசலம் வல்லியம்மைப்பில்லை தம்பதிகளுக்கு ஆறாவது மகவாக 1910 ஆம் ஆண்டு சித்திரை பதினான்காம் திகதி அன்று முருகனருளால் இப்புவியில் அவதரித்த. 
       வைரமுத்து தனது கல்வியை அக்காலத்தில் சிறந்துவிளங்கிய கந்தப்பர் பாடசாலையில் (சைவப்பிரகாசா வித்தியாசாலையில்) மேற்கொண்டார். திருநெல்வேலியில் அமைந்திருந்த சைவ ஆசிரியர் கலாசாலையில் கற்று ஆசிரியப் பயிட்சியை பெற்று தனது பத்தொன்பதாவது வயதில் ஆசிரியத்தொழிலை மேற்கொண்டார். ஆசிரியராகத் திகழ்ந்துவரும் காலத்தில் இவரின் அளப்பெரிய சேவையினாலும் திறமையினாலும் இவரை 1931 ஆம் ஆண்டில் இருந்து சைவப்பிரகாசா வித்தியாசாலையின் தலைமை உபாத்தியாயராக பதவிஉயர்த்தப் பட்டு அன்றிலிருந்து நாற்பது வருடம் பல இன்னல்கள் ,இடையூறுகளுக்கு மத்தியில் தலைமை உபாத்தியாயராக பணி புரிந்ததனால் இவர் சதா தலைமையாசிரியர் என எல்லோராலும் போற்றுதலுக்கும் உள்ளானார்.  

திரு .அம்பலவாணர் செல்லையா

திரு .அம்பலவாணர் செல்லையா 

பழம்பெரும் அதிபர்

        வேலணையின் புகழ்பூத்த பெரியார் வரிசையில் வைத்துக் கருதப்படுபவராக இளைப்பாறிய அதிபர் அம்பலவாணர் செல்லையா அவர்கள் விளங்குகின்றார். 
                 வேலணை கிழக்கில் கொழும்பார் குடும்பம் என்றழைக்கப்பட்ட புகழ்பெற்ற குடும்பம் ஒன்றில் அம்பலவாணர் பார்வதிப்பிள்ளை தம்பதிகளுக்கு கனிஷ்ட புத்திரனாக 1908 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 3 ஆம் திகதி திரு .செல்லையா அவர்கள் பிறந்தார். தமது ஆரம்பக் கல்வியை வேலணை வங்களாவடி அமெரிக்கன் மிஷன் தமிழ்க் கலவன் ,வேலணை சைவப்பிரகாசா வித்தியாசாலையிலும் பெற்றுக்கொண்டார். ஆசிரியர் கலாசாலைப் பயிட்சியை முடித்துக் கொண்ட செல்லையா அவர்கள் 1928 ஜனவரியில் யா /கரம்பன் சண்முகநாதன் வித்தியாலயத்தில் அதிபராக நியமனம் பெற்று 1930 வரை அங்கே கல்விச் சேவையை ஆற்றிவந்தார். தொடர்ந்து நயினாதீவில் சைவவித்தியா விருத்திச்சங்க பாடசாலையில் அதிபராக ஒரு வருடம் கடமையாற்றினார். 1932 ஜனவரியில் இருந்து யா /வேலணை சரஸ்வதி வித்தியாலயத்தில் அதிபராகக் கடமையேற்று 36 ஆண்டுகள் அதாவது 1968 ஆம் ஆண்டு வரை அவர் ஆசிரியர்த் தொழிலில் இருந்து இளைப்பாறும் வரை மிகச் சிறப்பாக வேலணைக் கிராமத்தின் கல்வி வளர்ச்சியில் ,அபிவிருத்தியில் அயராது சேவையாற்றினார். சேவையால் உயர்ந்த பெரிய உபாத்தியாயர் அவர்கள் 12 .09 .2004 இல் இறையடி எய்தினார்.